கோவிலுக்கு ₹ 1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் கொடையாளி பொதுமக்கள் கட் அவுட் வைத்து மகிழ்ச்சி

பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல சரியான பாதை இல்லாததால் பாஷா என்ற நபர் ₹ 1 கோடி மதிப்பிலான தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். ஒரு முஸ்லிம் நபர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு நிலம் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அடுகுடி பகுதியில் வசித்து வருபவர் எச்.எம்.ஜி. பாஷா. இவர் லாரி உட்பட சரக்கு வாகனங்களை வாடகைக்கு கொடுத்து வருகிறார். தொழிலதிபரான இவருக்கு பெங்களூரு அருகே ஒசகோட்டே வலகேரபுராவில் உள்ள பழைய மெட்ராஸ் சாலையில் 3 சென்ட் நிலம் உள்ளது.

அந்த நிலத்துக்கு அருகிலேயே வீர ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. ஆனால் இந்த கோவிலுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து கோவிலுக்கு செல்லும் பாதை அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான நிலத்தை பெற பாஷாவை அணுகியுள்ளனர். அவரது நிலத்தின் வழியே தான் கோவிலுக்கு செல்ல வழி அமைக்க முடியும். கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற பாஷா தானமாகவே தனது நிலத்தில் இருந்து 1.5 சென்ட் இடத்தை வழங்க முன்வந்தார்.

அதோடு கோவில் அறக்கட்டளைக்கு தானமாகவும் அந்த நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். இவரின் இந்த செயலை பாராட்டி அப்பகுதி மக்கள் பேனர் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பாஷா கூறியது: "இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற மத பாகுபாட்டை யாரும் பார்க்கக் கூடாது. அனைவரும் மனிதர்கள். சில அரசியல் கட்சியினர் தான் அவர்களது சுயநலனுக்காக மக்களிடையே சாதி, மதம், மொழி அடிப்படையில் பாகுபாட்டை உருவாக்குகிறார்கள். இனி வரும் தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாது.

இது போன்ற பிரிவினைவாதம் கண்டிப்பாக மாறியே தீர வேண்டும். இத்தகைய செயல்களால் நம் நாடு கடுமையாக பாதிக்கப்படும். ஒற்றுமை தான் நமக்கு முன்னேற்றத்தை அளிக்கும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஆஞ்சநேயர் கோவிலுக்கு எனது நிலத்தை தானமாக வழங்கினேன். கோவில் பாதை அமைக்கப்பட்ட பின் அங்கு செல்ல ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அப்பகுதியில் பாஷாவுக்கும், அவரது மனைவிக்கும் கட் அவுட் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

More News >>