தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மாதிரியை அமெரிக்காவில் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம் மற்றும் சிவகளை அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மாதிரியை அமெரிக்கா புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்துக்கு வயதை கண்டறியும் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு. தமிழக தொல்லியல் துறை சார்பில் 50 நினைவுச் சின்னங்கள் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 நினைவுச் சின்னங்கள் பராமரிப்பாளர்கள் நியமிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு டிசம்பர் 17-க்குள் அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் குறித்து பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அடுத்த விசாரணைக்குள் பெயர் பலகை அமைக்க வேண்டும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் படிப்புகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் உள்ளார்களா? ஆசிரியர்கள் காலிப்பணியிடம் தொடர்பாக இரு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம் மற்றும் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மாதிரி இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை அமெரிக்கா புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்துக்கு வயதை கண்டறியும் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல்துறை அனுமதி கேட்டுள்ளது. இதன் மீதான முடிவை மத்திய தொல்லியல்துறை தெரிவிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் மத்திய தொல்லியல்துறை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை. டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More News >>