உள்ளாட்சித் தேர்தல் பாஜக பெண் வேட்பாளர் கள்ளக்காதலனுடன் ஓட்டம்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 8ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் உட்பட 5 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாகவும், நேற்று திருச்சூர், கோட்டயம் உட்பட 5 மாவட்டங்களுக்கு 2ம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கண்ணூர், கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் வரும் 14ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கு தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. நாளை மாலையுடன் இங்கு பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் கண்ணூர் மாவட்டம் மாலூர் பஞ்சாயத்தில் 10வது வார்டில் பாஜக சார்பில் 23 வயதான இளம்பெண் போட்டியிடுகிறார்.
இவரது கணவர் அதே பஞ்சாயத்தில் 11வது வார்டு பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த சில வாரங்களாக இவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கண்ணூர் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் உள்பட முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 10வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் திடீரென மாயமானார். காசர்கோட்டில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் திரும்பவில்லை. இதனால் கடந்த சில தினங்களாக அந்த வார்டில் பிரச்சாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக தொண்டர்கள் மாயமான வேட்பாளரை தேடத் தொடங்கினர்.
அவரது உறவினர்களும் வேட்பாளரை பல்வேறு இடங்களில் தேடினர். இதில் அவர் காசர்கோட்டை சேர்ந்த அபிலாஷ் என்ற அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இருவரும் பல வருடங்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இருவரும் காசர்கோட்டில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர். கள்ளக்காதலன் அபிலாஷுடன் தொடர்ந்து வாழ விரும்புவதாகவும், கணவனுடன் செல்ல விருப்பமில்லை என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தால் மாலூர் பஞ்சாயத்து 10வது வார்டில் தங்களால் வாக்கு சேகரிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பாஜக தொண்டர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.