1200 டிராக்டர்கள்... இன்னும் 50 ஆயிரம் விவசாயிகள்.. டெல்லியை நோக்கி படையெடுப்பு!

டெல்லியைச் சுற்றி எல்லைகளில் விவசாயிகள் சாலைகளை ஆக்கிரமித்து 16வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் ரயில் மறியல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது.

இதைத் தொடர்ந்து, டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்று கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முடிவு செய்தனர். டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-ஆக்ரா சாலைகளையும் முடக்கி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அடுத்த கட்டமாக ரயில் மறியலில் ஈடுபட்டு, ரயில் போக்குவரத்தைத் தடை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய வேளாண் அமைச்சர் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, போராட்டங்களில் கலந்துகொள்ள இன்னும் 50 ஆயிரம் விவசாயிகள் 1200 டிராக்டர்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இவர்கள் டெல்லி நோக்கி புறப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் போராட்டம் தீவிரமாகும் எனத் தெரிகிறது.

More News >>