மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி... ஆளுநர் என்ன செய்கிறார்?!

கடந்த இரு தினங்களுக்கு முன் பாஜக தேசியத் தலைவர் நட்டா கொல்கத்தா சென்றிருந்தார். தேர்தல் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக இவர் சென்றிருந்தார். அப்போது இவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தான் தாக்குதல் நடத்தியதாக அமித்ஷா குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில கவர்னருக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டது.

அதில் மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை டெல்லிக்கு வரவழைக்க மத்திய உள்துறை தீர்மானித்துள்ளது. இருவரையும் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி ஜனாதிபதி ஆட்சிக்கு கொல்கத்தா ஆளுநர் தங்கர் பரிந்துரைத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கவர்னர் ஜக்தீப் தங்கர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது மேற்கு வங்க அரசியல் களத்தை மேலும் பதற்றம் ஆக்கியுள்ளது.

More News >>