குருவாயூர் கோவிலில் பூசாரிகள் உட்பட 46 பேருக்கு கொரோனா இன்று முதல் பக்தர்களுக்கு தடை
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் பூசாரிகள் உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோய் பரவல் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இந்தியாவிலேயே தினமும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிக்கப்படுவார்கள் கேரளாவில் தான் உள்ளனர். தினமும் சராசரியாக 5,000க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. நேற்று 4,470 பேருக்கு நோய் பரவியது. நேற்று காலை வரை 60 ஆயிரம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கேரளாவில் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.
இதற்கிடையே கேரளாவில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் 14ம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொரோனா மேலும் பரவ வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இதற்கிடையே கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்த சபரிமலை, குருவாயூர் உள்பட அனைத்து கோவில்களிலும் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், சபரிமலை மற்றும் குருவாயூர் கோவில்களில் கடந்த சில தினங்களாக ஊழியர்களுக்கு கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நேற்று குருவாயூர் கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பூசாரிகள் உட்பட 46 பேருக்கு நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குருவாயூர் கோவில் அமைந்துள்ள பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.