மனைவி, மகன் பிரிவால் தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்..
மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் இறந்த துக்கம் தாங்க முடியாமல் முதியவர் அவர்களது கல்லறை அருகே சிதை மூட்டித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் நாயர் (72). இவருக்குச் சுதா (66) என்ற மனைவியும், ஹரிகுமார் (35) என்ற ஒரே ஒரு மகனும் இருந்தனர். ராகவன் நாயர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். ஓய்வுக்குப் பின் இவர் அங்குள்ள என்எஸ்எஸ் என்ற அமைப்பில் பொருளாளராக பணிபுரிந்து வந்தார்.
மேலும் பத்தனாபுரம் பகுதி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் ஹரிகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருக்கு மூளை புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த இரு வருடங்களுக்கு முன் ஹரிகுமார் மரணமடைந்தார். ஒரே ஒரு மகன் இறந்த சம்பவம் மனதளவில் ராகவன் நாயருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த வருடம் இவரது மனைவி சுதாவுக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவரும் மரணமடைந்தார்.மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது ராகவன் நாயருக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. வீட்டில் தனிமையில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மகன் மற்றும் மனைவியின் கல்லறைக்குச் சென்ற ராகவன் நாயர், அங்குச் சிதை மூட்டி உடலில் தீ வைத்தார். இவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைத்து உடனடியாக அவரை கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராகவன் நாயர் பரிதாபமாக இறந்தார். மகன் மற்றும் மனைவியின் கல்லறைக்கு அருகே முதியவர் சிதை மூட்டி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.