காரில் நாயை கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்
காரின் பின்புறம் நாயைக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நாய்க்குப் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர் யூசுப் என்பவரைக் கைது செய்தனர். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது.கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள நெடும்பாசேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அகில். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று வழக்கம் போல தன்னுடைய பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலாக்கை என்ற இடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரின் பின்புறம் ஒரு நாயை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அகில், உடனடியாக அதை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அந்தக் காரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் அகில், காரை மறித்து, ' நாயை ஏன் இப்படிக் கட்டி இழுத்துச் செல்கிறீர்கள்' என்று டிரைவரிடம் கேட்டார். காரில் இருந்த டிரைவர், 'நாய் செத்தால் உனக்கு என்ன?' என்று கேட்டபடியே மீண்டும் காரை ஓட்டி ச் சென்றார்.
இதுகுறித்து அந்த வாலிபர் உடனடியாக விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒருவருக்கு போன் செய்து, அந்த வீடியோவையும் அனுப்பி வைத்தார். மேலும் சமூக இணையதளங்களிலும் அந்த வீடியோவை அகில் பகிர்ந்தார். நிமிட நேரத்தில் இந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவை பார்த்து கார் டிரைவரின் செயலுக்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த டிரைவர் சிறிது தூரம் சென்ற பின்னர் நாயை அவிழ்த்து விட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து போலீசுக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் நாயை இழுத்துச் சென்றவர் கொச்சியைச் சேர்ந்த யூசுப் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் துறைக்கும் தகவல் கிடைத்தது. தொடர்ந்து யூசுப்பின் லைசென்சை ரத்து செய்ய மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீர்மானித்தனர். கடந்த வருடம் கொச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இந்த நாய் யூசுப்பின் வீட்டுக்கு வந்துள்ளது. அதன் பின்னர் அந்த நாயை யூசுப் வளர்த்து வந்துள்ளார். ஆனால் நாய் வளர்ப்பதில் அவரது வீட்டினருக்கு விருப்பமில்லை. இதனால் தான் நாயைக் கட்டி இழுத்துச் சென்றதாக யூசுப் போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே படுகாயமடைந்த அந்த நாயை மீட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த நாயைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.