தேர்தல் பிரச்சாரம் குறித்து அறிவாலயத்தில் டிச.20ல் திமுக நிர்வாகிகள் ஆலோசனை..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திமுக மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு விட்டது.
இதற்கிடையே, அதிமுகவில் கட்சி அலுவலகத்திலேயே செயற்குழு கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் என அதிமுகவினர் பெருங்கூட்டத்தை நடத்தினர்.ஆனால், திமுகவின் தலைமை அலுவலகத்தில் அப்படி கூட்டங்கள் நடத்தப்படவில்லை. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆன்லைனில் நடத்தி வந்தார். பிரச்சாரக் கூட்டங்களையும் கூட ஆன்லைனில் நடத்தி வந்தார்.
இந்நிலையில், தற்போது அண்ணா அறிவாலயத்தில் முதல் முறையாக திமுக மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இது குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், டிசம்பர் 20ம் தேதியன்று காலை 10 மணியளவில் கட்சியின் மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.