ஸ்டெர்லைட் ஆலை முற்றுகையிடப்படும் - பெண்கள் அறிவிப்பு
2 நாட்களுக்குள் தூத்துக்குடி ஆலையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த ஆலையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதேபோல பல்வேறு கிராம மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
அதன்படி, அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒன்றரை மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றுவருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும், உயிரை காவு வாங்கும் நச்சு ஆலை தேவையில்லை என்று அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற 2 நாட்கள் கெடு விதித்துள்ளனர். அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை என்றால் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com