சம்பளம் கொடுக்க தாமதம்... ஐபோன் தொழிற்சாலையை சூறையாடிய ஊழியர்கள்
சம்பளம் கொடுக்க தாமதமானதால் கோலாரில் உள்ள ஐ போன் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று ஊழியர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 80 ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம் கோலாரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களை தயாரிக்கும் விஸ்ட்ரன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களில் பெரும்பாலோனோருக்கு முறையாகச் சம்பளம் கொடுக்கப்படுவது கிடையாது எனக் கூறப்படுகிறது. நல்ல உணவு, சம்பள உயர்வு உட்படக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நிறுவனத்தில் ஒரு பிரிவை சேர்ந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெரும்பாலான ஊழியர்களுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்கச் சொல்வதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அவ்வாறு 12 மணிநேரத்திற்கும் மேல் பணிபுரிந்தும் தினமும் 200 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே சம்பளமாகக் கிடைப்பதாகவும் ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.12 மணிநேரம் பணிபுரிந்தாலும் 7 முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே வேலை பார்த்ததாகப் பதிவேட்டில் குறிப்பிட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகக் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முதல் ஷிப்ட் பணியை முடித்துவிட்டு வெளியேறுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சில ஊழியர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களுக்கு தீ வைக்கப்பட்டன. அலுவலகத்திலிருந்த கண்ணாடிகள் மற்றும் பொருட்களைச் சூறையாடினர். ஏராளமான கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று வன்முறையில் ஈடுபட்ட 80 ஊழியர்களைக் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோலார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.