நர்ஸ் பணி ஏற்ற நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. பக்கவாத பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதி..
கொரோனா காலகட்டம் நெருக்கடியானதாக அமைந்துள்ளது. பல திரையுலகினர் பாதிப்புக்குள்ளாக்கினர். நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி விஷால் வரையிலும் நடிகை நிக்கி கல்ராணி ஐஸ்வர்யா ராய் தொடங்கி தமன்னா வரையிலும் பாதிக்கப்பட்டனர்.கொரோனா லாக்டவுனில் எல்லா நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். இந்தி நடிகை ஷிகா மல்ஹோத்ரா. இவர் ஃபேன், ரன்னிங் ஷாதி டாட் காம், லக்கி கபூடர் போன படங்களில் நடித்திருக்கிறார்.
முன்னதாக இவர் பிஎஸ்சி நர்ஸிங் டிகிரி முடித்திருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் இவர் நடிப்பிலிருந்து விலகி கொரோனா நோயாளிகளுக்குச் சேவை செய்ய மீண்டும் நர்ஸ் பணியில் சேர்ந்தார். அவரது இந்த முடிவைப் பலரும் பாராட்டினார்கள். சில மாதங்கள் அவர் இந்த பணியில் இருந்த நிலையில் ஷிகாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவருக்கு நேற்று பக்கவாத நோய் தாக்கியது. அவரது வலது பக்க உடல் செயலிழந்தது.
உடனடியாக மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மேனேஜர் தெரிவிக்கும் போது. ஷிகாவுக்கு கடுமையான பக்கவாத தாக்குதல் ஏற்பட்டது. அவரது வலது புறம் உடல் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் ஷிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஷிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரால் தற்போது பேச முடியவில்லை.
ஷிகாவுக்கு 13 வயதாக இருந்த போது ஒருமுறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இரண்டரை வருடம் படுக்கையில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக இருந்தும் துணிச்சலாக கொரோனா தொற்று நோயாளிகளுக்குச் சேவை செய்தவருக்கு இப்படியொரு சோகம் நிகழ்ந்திருப்பது திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தி உள்ளது. அவர் விரைந்து குணம் அடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.