பாலிடெக்னிக் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. அரசு மற்றும் தனியார் நிர்வாகங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், இணைய வழிக் கல்வி முறை என்பது கிராமப்புற மாணவர்களுக்குப் பல சங்கடங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், கடந்த ஆண்டில் இறுதியாண்டு பயின்ற மாணவர்களுக்கு இணைய வழியில் மட்டுமே தேர்வு நடைபெற்றது. மற்ற கல்வியாண்டில் படித்த மாணவர்களின் அந்தந்த பருவத்தேர்வில் மட்டும் தேர்ச்சி என அரசு அறிவித்துவிட்டது.
மேலும், தேர்வுக்கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களின் அனைத்து அரியர் பாடங்களும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், கல்வியாளர்களிடையே பெரிய அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. மேலும் அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, யுஜிசி மற்றும் ஏசியிடிஇ வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் 2020-2021 ம் கல்வி ஆண்டின் முதல் பருவத்தேர்வு அதாவது 3, 5 பருவத்தில் பயிலும் மாணவர்களுக்கு OCT/NOV2020 க்கான பருவத்தேர்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்குமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த பருவத்தேர்வில் கால அளவு முடிந்த மாணவர்களுக்குக் கருணை அடிப்படையில் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பருவத்தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையைத் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பருவத்தேர்வும் இணைய வழியில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட எழுத்துத் தேர்விற்கான தேர்வு அட்டவணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/563_DipTimeTable3.pdf