திருப்பதி கோயிலில் அனைத்து வயதினரும் தரிசனம் செய்ய அனுமதி
கொரோனா ஊரடங்கு தளர்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 8 முதல் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பத்து வயதிற்குப்பட்டவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை. கொரோனா தொற்று படிப்படியாக அகன்று வரும் நிலையில் அனைத்து தரப்பினரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏராளமானோர் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
மேலும் குழந்தைகளின் பிறந்தநாள் முடிக் காணிக்கை , காது குத்துதல், அன்னபிரசனம், பெயர் சூட்டுதல், 70-80 வயதான தம்பதியினர்களின் சஷ்டி பூர்த்தி போன்ற நிகழ்ச்சிகளுக்காக அனுமதிக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குப்பட்டவர்களும் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வரலாம் எனத் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் முன்பதிவு செய்துதான் வர வேண்டும். இவர்களுக்கு எனத் தனி வரிசைகள் இல்லை. டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.