கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்... முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், யாரிடமிருந்தும் ஒரு நயா பைசா கூட வாங்க மாட்டோம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. தினமும் சராசரியாக 5,500 பேருக்குமேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல தினமும் சராசரியாக 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர். இன்று மட்டும் 5,949 பேருக்கு கொரோனா நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 32 பேர் இன்று மரணமடைந்தனர்.

இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,594 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.65 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் நோய் பரவல் அதிகரித்து வருவது கேரள சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் கேரளாவில் நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் நோய் மேலும் பரவக்கூடும் என்றும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கவனமாக இருந்தால் மட்டுமே நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிகிறது. தடுப்பூசி தயாராகி விட்டால் கேரளாவுக்கு எந்த அளவுக்கு அது கிடைக்கும் என்று தெரியாது. ஆனாலும் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதியாக நான் கூறுகிறேன். எந்தக் காரணம் கொண்டும் யாரிடமிருந்தும் தடுப்பூசிக்காக நயா பைசா கூட வாங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>