கொச்சியில் 6வது மாடியிலிருந்து குதித்த தமிழக பெண் பரிதாப மரணம் பிளாட் உரிமையாளர் சிறை வைத்ததாக புகார்
கடந்த வாரம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்த சேலத்தை சேர்ந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் இறந்தார். அவரை வீட்டுக்குள் சிறை வைத்ததால் தான் தப்பிக்க முயற்சித்ததாக அந்தப் பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த இளம்பெண் வேலை பார்த்து வந்த வீட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சி மரைன் டிரைவ் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் கான். கேரள உயர்நீதி மன்ற வழக்கறிஞரான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சேலத்தை சேர்ந்த குமாரி (45) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இம்தியாஸ் கானின் வீட்டில் சமையல் அறையில் தான் குமாரிக்கு தங்க அவர் இடம் கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி குமாரி, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள கூரையின் மேல் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து கொச்சி மத்திய போலீசுக்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அவர் 6வது மாடியிலிருந்து சேலையை கயிறு போல கட்டி இறங்க முயன்றது தெரியவந்தது. இதற்கிடையே படுகாயமடைந்த குமாரியை போலீசார் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து கொச்சி போலீசார் முதலில் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருந்தனர்.
இம்தியாஸ் கான் வக்கீல் என்பதாலும், அவர் மிக முக்கிய பிரமுகர் என்பதாலும் தான் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே குமாரி மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய போலீசார் முயற்சித்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் குமாரியின் கணவர் சீனிவாசன் தகவல் கிடைத்ததும் கொச்சி சென்றார். தொடர்ந்து இம்தியாஸ் கான் தனது மனைவியை வீட்டில் சிறை வைத்திருந்தார் என்றும், அதனால் தான் தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்தார் என்றும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார். இதன் பிறகே போலீசார் இம்தியாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குமாரி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுவரை அவரிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியாததால் அவர் எதற்காக தப்பிக்க முயற்சித்தார் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே தன் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது என்றும், குமாரி தன்னுடைய பர்சை திருடி தப்பிக்க முயன்ற போது தான் கீழே விழுந்தார் என்றும் இம்தியாஸ் கான் கொச்சி போலீஸ் புகார் செய்துள்ளார். இம்தியாஸ் கான் மீது ஏற்கனவே ஒரு புகார் இருப்பது தெரியவந்துள்ளது. இவரது வீட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு 15 வயது சிறுமி வேலை பார்த்ததாகவும் அவரை அடித்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. ஆனால் அப்போதும் போலீசார் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.