தற்கொலை செய்த டிவி நடிகை சித்ரா வெள்ளித்திரை கனவு..
பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வந்த நடிகை வி.ஜே.சித்ரா சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவருக்கு பதிவு திருமணம் ஆகிவிட்டது என்றும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது என்றும் இருவிதமாக கூறப்படுகிறது. சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தனக்கு பதிவு திருமணம் ஆகிவிட்டதாக ஹேம்நாத் என்பவர் கூறினார். அவர்தான் சித்ராவுடன் தங்கி இருந்தாராம். சித்ராவை அடித்து கொன்றுவிட்டார் என்று ஹேம்நாத் மீது சித்ரா தாயார் புகார் கூறுகிறார். ஆனால் சித்ரா மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று ஹேம்நாத் கூறுகிறார். இதுகுறித்து ஹேம்நாத்திடம் 4வது நாளாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சீரியல் இயக்குனர் சிவசேகர், நடிகர்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன், தங்கராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகர்கள் வெங்கட், ரங்கநாதன், ஹேமா ராஜ் குமார், சரவணன், விக்ரம் ஆகியோரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. சித்ரா இறப்பதற்கு முன் சினிமா ஆசையில் இருந்தார். அவர் நடிப்பில் கால்ஸ் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. அதுபற்றிய விவரம்: இன்பினிட் பிக்சர்ஸ் (Infinite Pictures) நிறுவனம் தயாரித்த "கால்ஸ்" என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றது. இந்த படத்தில் வி.ஜே. சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது. மேலும் முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி 15 டிசம்பர் ஃபர்ஸ்ட்லுக், ஜனவரி 1 2021 ட்ரெய்லர் வெளியிட்டு ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எதிர்பாராதவிதமாக படத்தின் கதாநாயகி விஜே சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராத விதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.