திருப்பதி கோவிலில் பிரசாதம் நிறுத்தம்.. பக்தர்கள் கோஷம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச பிரசாதம் திடீரென நிறுத்தப்பட்டதால் ஆவேசமடைந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் சுவாமிக்கு படைக்கப்படும் பொங்கல், புளியோதரை, சிறிய லட்டு பிரசாதங்கள் தொன்னையில் வழங்கப்படும். கொரோனா தொற்று காரணமாக துளசி தீர்த்தம் வழங்குவது நிறுத்தப்பட்டது. அன்னப் பிரசாதம் மற்றும் சிறிய லட்டு ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாக கோயிலுக்கு வருவோருக்கு எந்தவித பிரசாதமும் வழங்கப்படுவதில்லை என பக்தர்களிடையே புகார் எழுந்தது.
இன்று காலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் காலி ஆகிவிட்டது என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். கொடிமரம் அருகே பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாவது வழங்க வேண்டும் என்று கேட்டடனர். ஆனால் லட்டு பிரசாதம் வருவதற்கு காலதாமதம் ஆகும் என அறிவித்து அங்கிருந்த ஊழியர்கள் பக்தர்களை கோயிலில் இருந்து வெளியேற்றினர். ஆனால் அதே சமயம் வி.ஐ.பி. தரிசனத்தில் வந்த சில பக்தர்களுக்கு மட்டும் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவிலுக்குள் இருந்து கூச்சலிட்டபடியே வெளியே வந்தனர். தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து அந்த பக்தரிடம் சிலர் கூறுகையில், அன்ன பிரசாதம் காலியாகி விட்டால் அதற்கு பதிலாக சிறிய லட்டு பிரசாதம் வழங்குவது வழக்கம். எந்த ஒரு பிரசாதமும் வழங்காமல் இருப்பது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. சிறிய கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கூட ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கப்படுகின்றனர்ஆனால் கோடிக்கணக்கில் வருமானம் வரக்கூடிய இவ்வளவு பெரிய கோவிலில் பிரசாதம் வழங்கப்படாதது மனவேதனை அளிக்கிறது என தெரிவித்தனர். கோவிலை விட்டு வெளியே வந்த பக்தர்கள் மீண்டும் தேவஸ்தானத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் கோவில் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.