மக்கள் பட்டினி கிடக்கும்போது யாரைக் காப்பாற்ற புதிய நாடாளுமன்ற கட்டிடம்? மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்குமேல் மக்கள் பட்டினி கிடக்கும்போது ₹ 1,000 கோடி செலவில் யாரை காப்பாற்றுவதற்காக நீங்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளார். தென் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் அவர் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இன்று மதுரையில் பிரசாரத்தை தொடங்கும் அவர், பின்னர் அங்கிருந்து தேனி, நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அதிக எண்ணிக்கையில் ஆட்கள் கூடக் கூடாது என்பதால் பொதுக்கூட்டம் நடத்த இதுவரை கமலுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் இன்று கூறியிருப்பது: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பாதி பேருக்கு மேல் பட்டினியால் போராடி வருகின்றனர். இந்த சமயத்தில் 1,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவது யாரை காப்பாற்றுவதற்காக? என்னுடைய இந்த கேள்விக்கு பிரதமர் மோடி தயவு செய்து பதில் கூற வேண்டும்.
சீனாவில் பெரும் சுவர் கட்டும்போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இறந்தனர். அப்போது சீன மன்னர் தொழிலாளர்களிடம் கூறுகையில், உங்களைப் பாதுகாக்கத் தான் இந்த சுவரை கட்டுகிறேன் என்றார். இவ்வாறு கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பும் கமல்ஹாசன் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கடும் விமர்சனம் செய்திருந்தார். ரோம சாம்ராஜ்யம் எரியும் போது வீணை வாசித்த நீரோ சக்ரவர்த்தியுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.