பகல் முழுவதும் பாட்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் மனைவி, உறவினர்களிடம் போனில் பேசலாம்.. கேரளாவில் கைதிகளுக்கு புதிய சலுகைகள்
கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க கேரளாவில் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி பகல் முழுவதும் எப்எம் ரேடியோவில் பாட்டு கேட்கலாம். மனைவி உட்பட உறவினர்களிடம் தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் போனில் பேசலாம்.கேரளாவில் சமீப காலமாக சிறைகளில் கைதிகளிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இது குறித்து மனித உரிமை ஆணையம் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் கைதிகள் நாள் முழுக்க சிறையில் தனிமையில் இருப்பதால் அவர்களது மன அழுத்தம் அதிகரித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறைகளில் பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம், கேரள சிறைத் துறையிடம் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங், கேரள அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பது: கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை எப்எம் ரேடியோவில் பாட்டுகளை ஒலிபரப்பலாம். மனைவி மற்றும் உறவினர்களிடம் போன் பேச கட்டுப்பாடு ஏற்படுத்தக் கூடாது. தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்கள் உறவினர்களிடம் போனில் பேச அனுமதிக்க வேண்டும். போனில் பேச ஆர்வம் காட்டாதவர்களை கட்டாயப்படுத்தி உறவினர்களிடம் போன் பேச வைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்.
மேலும் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது சூரிய ஒளி உடலில் படும்படி நடமாட அனுமதிக்க வேண்டும். சீருடை இல்லாமல் சாதாரண உடையில் கைதிகளின் நலன்கள், குறைகள் மற்றும் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை கவுன்சிலிங் வகுப்புகள் நடத்த வேண்டும். சமூக நல அமைப்புகளின் உதவியுடன் வார, மாத இதழ்களை வாங்கி கைதிகளுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும். இவ்வாறு டிஜிபி ரிஷிராஜ் சிங், கேரள அரசிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கேரள அரசு இந்தத் திட்டங்களை செயல்படுத்தும் என தெரிகிறது.