விவசாயச்சங்க தலைவர்கள் 40 பேர் உண்ணாவிரதம்.. 19வது நாளாக தொடரும் போராட்டம்..
டெல்லியில் 19வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 40 விவசாயச் சங்கத் தலைவர்கள் இன்று(டிச.14) காலை 8 மணியளவில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-ஹரியானா பாதைகளில் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாகனங்களுடன் முகாமிட்டுள்ளனர்.
இதனால், டெல்லியில் இருந்து ஹரியானா செல்லும் சாலைகள் முடங்கியுள்ளன. ராஜஸ்தானில் இருந்து டெல்லிக்கு நேற்று வந்த விவசாயிகளின் அனைத்து வாகனங்களும் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், டெல்லி-ஜெய்ப்பூர் சாலையும் முடங்கிப் போயுள்ளது. ஏற்கனவே டெல்லி- ஆக்ரா சாலையிலும் விவசாயிகளின் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது. தற்போது டெல்லியைச் சுற்றியுள்ள சிங்கு, திக்ரி, கர்னால், பானிபட், பாதர்பூர், குரு கிராமம், பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுடன் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டக் குழு தலைவர்கள் 40 பேர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். இது குறித்து, பாரதீய கிஷான் யூனியன் பொதுச் செயலாளர் ஹரீந்தர்சிங் லோகோவால் கூறுகையில், சிலர் அரசுக்கு ஆதரவாகப் போராட்டத்தை விலக்கிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் எங்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்களே அல்ல. கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள 40 சங்கங்களின் தலைவர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. சிங்கு எல்லையில் 25 தலைவர்களும், திக்ரியில் 10 பேரும், உ.பி. எல்லையில் 5 பேரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அடுத்த கட்டமாக, போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்துவோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்று தெரிவித்தார்.