மாணவர் சங்கத் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற போது விமான நிலையத்தில் கைது
கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராசில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அரசியல் கட்சியினர் உள்பட ஏராளமான பிரமுகர்கள் செல்ல முயன்றனர்.
ஆனால் உத்திரப் பிரதேச மாநில போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கேரளாவை சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் என்ற மாணவர் அமைப்பின் தேசிய பொருளாளரான அதீக்வர் ரஹ்மான், மலையாள பத்திரிகை நிருபர் சித்திக் காப்பன், மசூத் அகமது, ஆலம் பெஹல்வான் ஆகியோரும் ஹத்ராசுக்கு சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கேரளாவை சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளரான கொல்லத்தை சேர்ந்த ரவுப் ஷெரீப் என்பவர் அவர்களுக்கு பண உதவி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து மத்திய அமலாக்கத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.
இதில் அவருக்கு 3 தனியார் வங்கிகளில் கணக்குகள் இருப்பதும், அந்த வங்கி கணக்குகளில் கடந்த இரு வருடங்களில் இரண்டரை கோடிக்கு மேல்பணம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறையினர் தீர்மானித்தனர். இதையடுத்து மூன்று முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உளவுத்துறை போலீசார் ரவுப்பை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் துபாய்க்கு தப்பிச் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அவரை மத்திய அமலாக்கத் துறையினர் எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.