ரயில்களில் புதிய வசதி விரைவில் அறிமுகம்

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சைடு லோவர் பெர்த்துகளில் தூங்குவதற்கு இதுவரை பயணிகளுக்குச் சற்று சிரமமாக இருந்தது. இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் விரைவில் புதிய பெர்த்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் அதிகபட்சமாக 72 பெர்த்துகள் இருக்கும். இரண்டாம் மற்றும் முதலாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இதைவிட பெர்த்துகள் சற்று குறைவாக இருக்கும்.

தற்போது தயாராகி வரும் புதிய ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 80 பெர்த்துகள் வரை இணைக்கப்பட்டுள்ளன. இதில் சைடு லோவர் பெர்த்தில் படுத்துத் தூங்குவதற்குப் பயணிகள் இதுவரை சற்று சிரமப்பட்டு வந்தனர். இரண்டு சீட்டுகளை இணைக்கும்போது தான் சைட் லோவர் பெர்த்தில் பயணிகள் படுக்க முடியும். இப்படி இணைக்கும்போது நடுப்பகுதி சற்று தாழ்வாக இருக்கும் என்பதால் பயணிகளுக்கு சுகமாகப் படுத்துத் தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் ரயில்வே துறை பயணிகளுக்கு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி சைடு சீட்டுகளை இனி இணைக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக சைடு சீட்டுக்கு அருகிலேயே ஒரு பெர்த் இணைக்கப்பட்டிருக்கும். படுக்கும்போது அதை இழுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்த பிரச்சினையும் இருக்காது. பயணிகள் சுயமாகப் படுத்துத் தூங்கலாம். இந்த வசதி விரைவில் ரயில்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

More News >>