நாளை முதல் குற்றால அருவிகளில் நீராட அனுமதி

கொரோனா தொடர் பரவல் காரணமாகக் குற்றால அருவிகளில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டது. கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது.இன்று முதல் மெரினா கடற்கரை மாமல்லபுரம் உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில் நீராடப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் நீண்ட நாட்களாகக் கூறி வந்தனர்.இந்நிலையில் அருவிகளில் நாளை டிச 15 முதல் குற்றால அருவிகளில் பொதுமக்கள் நீராட அனுமதி அளிக்கப்படும் எனத் தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தினமும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அருவிகளில் குளிக்க வருபவர்களைக் கண்காணிக்க ஒவ்வொரு அறிவிக்கும் ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர். மேலும் சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைச் சுற்றுலாப் பயணிகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு குற்றால அருவியில் நீராடப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்லாது குற்றாலத்தில் உள்ள வர்த்தகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More News >>