இந்திய அணிக்கு எதிரான மோசமான ஆட்டம்... ஆஸ்திரேலியா ஏ அணிக்கு ஆலன் பார்டர் கடும் கண்டனம்
இந்திய அணியுடனான மூன்று நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி மோசமாக விளையாடியதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், டி20 போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி 17ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடனான மூன்று நாள் போட்டி கடந்த 11ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்தப் போட்டி இரு அணிக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமநிலையில் முடிந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 86 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். ரிஷப் பந்த் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சதம் அடித்தனர். இறுதியில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது. இறுதியில் இந்தப் போட்டி யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.இந்தப் போட்டியில் இந்திய வீரர்களின் பேட்டிங்கும், பவுலிங்கும் மிகச்சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் மிக சுமாராகவே ஆடினர். இந்நிலையில் ஆஸ்திரேலிய 'ஏ' வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஆஸ்திரேலிய 'ஏ' அணியின் பீல்டிங், பவுலிங் மற்றும் கேப்டன்சி ஆகியவை மிக மிக மோசமாக இருந்தது. இது ஒரு ஆஸ்திரேலிய அணி என்பதை அவர்கள் மறந்து விட்டனர். இந்தப் போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து யாராவது ஒரு வீரர் என்னிடம் விளக்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது மிக வெட்கக்கேடான ஒன்றாகும். கிரிக்கெட்டில் நான் பார்த்த போட்டிகளில் மிக மோசமான ஆட்டம் இதுதான். என்னுடைய கருத்தில் யாருக்காவது எதிர்க் கருத்து இருந்தால் என்னிடம் நேரடியாகவே பேசலாம். எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.