விவசாயிகளுக்காக பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் டி.ஐ.ஜி!
அமிர்தசரஸ்: விவசாயிகளுக்கு ஆதரவாகத் தனது டி.ஐ.ஜி பதவியைப் பஞ்சாப் அதிகாரி லக்மிந்தர் சிங் ஜக்கர் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், சட்டத்தை ரத்து செய்ய விரும்பாத மத்திய அரசு, திருத்தங்கள் செய்வதாக உறுதி அளிக்கிறது.
இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் லக்மிந்தர் சிங் ஜக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக டி.ஐ.ஜி. லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறுகையில், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அமைதியாகப் பல நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் குரல்களை மத்திய அரசு கேட்கவில்லை. நான் அரசுப் பணியில் இருக்கிறேன். எனவே, நான் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க முடியாது. போராட்டத்தில் பங்கேற்கவும் முடியாது. இதனால் எனது பணியை ராஜினாமா செய்ய முடிவை எடுத்துள்ளேன் என்றார்.
நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர் தான் போலீஸ் அதிகாரி. எனக்கு இன்று எந்த பதவி கிடைத்தாலும், அதற்குக் காரணம் எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னைப் படிக்க வைத்ததனால் தான். எனவே, விவசாயத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.
எனவே, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் எனது விவசாயி சகோதரர்களோடு நானும் போராட்டத்தில் பங்கேற்க விரும்புகிறேன். இதனால், உடனடியாக என்னை டிஜிஜி பதவியில் இருந்து விடுவிக்கக்கோரி மாநில உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.