பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாண புரம், நல்வாழ்வு ஆசிரமம் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுடலை மணி (வயது 27). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் அருகிலுள்ள வெய்க்காலிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வேலை முடிந்ததும் ஊருக்குத் திரும்பிச் சென்று விடுவார். சம்பவத்தன்று சுடலை மணி வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். மாலையில் வேலை முடிந்து ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் ஆவுடையானூர் மாடியனூர் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டுச் சுடலை மணியின் உடலைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்குத் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன், பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் மோப்ப நாய் ரிக்கியும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் அங்குள்ள தோட்டத்துப் பகுதிகளில் வெகு தூரம் ஓடிச் சென்றது. இந்த கொலை சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி கல்லால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>