காசோலை மோசடியை தடுக்க பாசிட்டிவ் பே நடைமுறை... வரும் ஜனவரி 1 முதல் அமல்!!!
டெல்லி: காசோலை பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்கு பாசிட்டிவ் பே நடைமுறை ஜனவரி முதல் அமலாகியது. இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக, போலி காசோலைகளைத் தயாரித்து அதன்மூலம் நிதி மோசடி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காசோலைப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்கு பாசிட்டிவ் பே என்ற புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், காசோலை மோசடிகள் அதிகரித்துவரும் இந்த வேளையில், அதற்கான தீர்வுகளை வழங்குவது ரிசர்வ் வங்கியின் முதன்மையான கடமைகளில் ஒன்றாகும். இதற்கான பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் பாசிட்டிவ பே சிஸ்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த செயல்முறையானது காசோலைப் பணப் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும். காசோலை மூலமாக நிகழும் மோசடிகளும் குறையும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காசோலை பரிவர்த்தனைக்கான பாசிட்டிவ் பே நடைமுறை வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், 50,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகள் குறித்த விவரங்களை விருப்பப்பட்டால், காசோலை வழங்குபவர் வங்கிக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் காசோலை வழங்குபவர்கள் கட்டாயம் விவரங்களை வங்கிக்கு வழங்கவேண்டும். அதாவது, காசோலை எண், காசோலை தேதி, பணம் பெறுபவரின் பெயர், அவருடைய வங்கிக் கணக்கு எண், தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வங்கிக்கு எஸ்.எம்.எஸ், மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் அனுப்பிய இந்தத் தகவல்களின் அடிப்படையில், விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகே, பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவர். சரிபார்ப்பின்போது தகவல்கள் பிழையாக இருந்தால் அல்லது சரியான தகவல்களாக இல்லாமல் இருந்தால், வங்கிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது.