எங்கே எய்ம்ஸ்? மதுரையை கலக்கிய போஸ்டர்
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் பிரதமர் மோடி கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தொடக்க பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதம் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் துவங்கியது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பணிகள் மந்தமாகவே நடந்து வருகிறது.இந்நிலையில் மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர்கள் நகர் முழுக்க ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை ஆண்டவ ராஜ் என்ற பெயரில் செல்போன் எண் குறிப்பிடப்பட்டு எங்கே எய்ம்ஸ் என்ற கேள்விக் குறி வாசகங்களோடு ஒட்டப்பட்டுள்ளது இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி ஆகியோர் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.இந்த போஸ்டர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.