தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பது பெண்கள் கையில் உள்ளது : தேனியில் கமல்ஹாசன் பேச்சு
தமிழகம் சீரமைப்போம் என்ற தலைப்பில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தேனியில் இன்று நடந்த மகளிர் அணி, ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: அரசியலில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமையை போலவே மக்கள் நீதி மையத்திலும் பெண்களுக்கு உரிய உரிமையும் பதவிகள் வழங்கப்படும். தங்கையாக அம்மாவாக தோழியாக மனைவியாக சாதித்து வரும் பெண்கள் அரசியலிலும் சாதிப்பார்கள் என்பது மக்கள் நீதி மையத்தின் கருத்து. வீட்டில் உள்ள பெண்களுக்கு இல்லத்தரசி என்ற பட்டத்தைக் கொடுத்து விட்டு, வெளியில் எந்த மரியாதையும் கொடுப்பதில்லை.
தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 3.1 கோடியும், பெண் வாக்காளர்கள் 3.9 கோடி பேரும் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சியில் யார் அமரலாம் என்பது பெண்கள் கையில்தான் உள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் பெண்களுக்கு சமபங்கு உண்டு, அவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும். மற்ற கட்சிகளில் பெண்களை நுழைய விடாமல் அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். ஆனால் எங்கள் கட்சியில் அது கிடையாது. பெண்களுக்கு அரசியல் ஒரு குழுவின் அங்கமாக விளங்குவார்கள். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இரண்டரை ஆண்டுகள் ஆண்கள் மற்றும் இரண்டரை ஆண்டு பெண்கள் ஆள வேண்டும் என்றார். அவர் அறிவித்தது யாரைக் குறித்து என்பது தெரியவில்லை. அரசியலில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வழி கொடுங்கள்.
நாடு முன்னேறும். ஆனால் இங்கு பார்த்தால் அப்பா எம்எல்ஏ மகன் எம்பி. எப்படி இவர்கள் பெண்களுக்கு வழி கொடுப்பார்கள். தேனிக்கு வந்தது பெண்களின் மனத்தை மாற்றுவதற்காக அல்ல. தமிழகத்தின் நிலையை மாற்றுவதற்காக எங்கு கூட்டம் நடந்தாலும் கூட்டம் முடிந்த பின்பு மக்கள் நீதி மையம் கட்சியினர் கீழே கிடக்கும் அனைத்து குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள். கட்சிக் கூட்டத்திலே குப்பைகளை கிளீன் செய்யும் நாங்கள் அரசியலுக்கு வந்தால் அரசியலில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வோம் என பேசினார். பின்னர் பெரிய குளத்திற்கு வந்த கமலஹாசன் தொண்டர்களை பார்த்து பேசுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அவர் பேசாமல் தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு சென்றார்.