தேர்தல் ஆணையத்தில் ரஜினி பெயரில் புதிய கட்சி பதிவு.. சின்னம் ஆட்டோ..
தேர்தல் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில், மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். கடந்த 25 வருடமாக அரசியலுக்கு வருவதாகப் போக்கு காட்டி வந்த ரஜினிகாந்த் கடந்த 3ம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார். ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப் போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும் என்று கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு அளித்த பேட்டியில், அண்ணாத்தே படத்தை முடித்துக் கொடுத்து விட்டு கட்சிக்கு வருவேன். கட்சிக்கு மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ரஜினிகாந்த் பெயரில் ஒரு புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் சேவைக் கட்சி என்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி, இன்று(டிச.15) டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாபா முத்திரை கேட்டிருந்த அந்த கட்சிக்கு அது தரப்படவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குக் குக்கர் சின்னம் தரப்பட்டுள்ளது. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குக் கடந்த முறை கிடைத்த பேட்டரி டார்ச் லைட் சின்னம் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் மட்டும் அந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கலங்கரை விளக்கம் சின்னத்தைக் கமல் தேர்வு செய்வார் என்று தெரிகிறது.