விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவா? நிதின் கட்கரி பேட்டி..
விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது. அவர்களின் போராட்டம் 20வது நாளாகத் தொடர்கிறது.
இந்நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் ஏழை விவசாயிகள் 10 ஆயிரம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு விவசாயிகளின் நிலைமை தெரியும். டெல்லியில் தற்போது போராடும் விவசாயிகளுடன் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலும், வேளாண் அமைச்சர் தோமரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.என்னைப் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னால், நான் அவர்களுடன் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பேன். விவசாயிகள் எழுப்பும் பிரச்சனைகள் நியாயமானவை. அவை குறித்து விவாதிக்க வேண்டும். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், அது தவறான தகவல்களைக் கொண்டு போய் சேர்க்கும். தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது. எனவே, அன்னா ஹசாரே அந்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றே கருதுகிறேன்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.