9 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பில் ரஜினிகாந்த்.. முககவசத்துடன் நட்சத்திரங்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் குஷ்பு, நயன் தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். குடும்ப கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு முன்பு தொடங்கியது. அப்போது 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2 மாதத்துக்கு முன் ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியது.
பல படப்பிடிப்புகள் தொடங்கி நிலையில் அண்ணாத்த ஷூட்டிங் தொடங்கப்படாமலிருந்தது. படக்குழு மற்றும் நட்சத்திரங்களின் பாதுகாப்பு கருதிப் படப்பிடிப்பை தள்ளிவைக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருந்ததால் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது.கொரோனா முற்றிலும் ஒழிந்து ஊரடங்கு முற்றிலும் விலக்கிக் கொண்ட பிறகே அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்துக் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, அண்ணாத்த படப்பிடிப்பை முடிக்க வேண்டியது என் கடமை என்றார்.
இம்மாத இறுதியில் புதிய கட்சி தொடங்கும் தேதியை ரஜினி அறிவிக்க உள்ளார். ஜனவரி மாதம் தனி கட்சி தொடங்குகிறார். இதையடுத்து அதற்கு முன்பாக அண்ணாத்த படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். நேற்றுமுந்தினம் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ராமோஜி ராவ் ஷூட்டிங்கில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் நேற்று ரஜினி கலந்துகொண்டார். அதாவது 9 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது.
வேட்டி சட்டை அணிந்து எளிமையான கிராமத்துத் தோற்றத்தில் இருக்கும் காட்சிகளில் ரஜினி நடிக்கப் படமாக்கப்பட்டது. அவருடன் நயன்தாரவும் இணைந்து நடித்தார். ரஜினியின் அண்ணாத்த ஷூட்டிங் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது. படப்பிடிப்பு தவிர்த்து மற்ற நேரங்களில் ரஜினி மற்ற நட்சத்திரங்கள் முககவசம் அணிந்திருக்கின்றனர். கொரோனா கால வழிகாட்டு நடைமுறைகளும் படப்பிடிப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.