பரபரப்பான ஒரு நாள் போட்டி: படபடத்த மிதாலி ராஜ்!

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த மகளிருக்கான உலக கோப்பையில் இந்தியா, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் ஞாபகம் வந்தது என்று கூறியுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். இந்திய சுற்றுப் பயணத்தில் இருக்கும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

மூன்று போட்டிகளும் நாக்பூரிலேயே நடைபெறுகின்றன. முதல் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 49.3 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, ஒரு கட்டத்தில் 150 ரன்களை 7 விக்கெட்டுகள் கையில் வைத்து கடந்தது.

ஆனால், மளமளவென 6 விக்கெட்டுகளை இழந்ததால், கடைசி விக்கெட்டில் பார்ட்னர்ஷிப் போட்டு இலக்கை கடந்தது இந்தியா. இது சென்ற ஆண்டு நடந்த உலக கோப்பையில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் நடைபெற்றது போலவே இருந்தது.

ஒரு சின்ன வித்தியாசம், அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இப்படி பரபரப்பான ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மித்தாலி ராஜ், `இந்தப் போட்டி கண்டிப்பாக உலக கோப்பை இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தியதுதான். ஆனால், அன்று கடைசியில் இறங்கியவர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால், இந்தப் போட்டியில் எங்களது வீராங்கனைகள் இலக்கை கடந்தனர்’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>