விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3500 கோடி இழப்பு.. தீர்வு காண அசோசேம் வலியுறுத்தல்..
விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படுவதாக அசோசேம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.15) 20வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது. இந்நிலையில், அசோசேம் எனப்படும் இந்திய வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பொருளாதாரம் என்பது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை தொழில்களை அடிப்படையாகக் கொண்டது. தற்போது விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்த மாநிலங்களில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறையுடன் இணைந்த அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன.
குறிப்பாக, உணவு பதனிடுதல், ஜவுளித்துறை, வேளாண் கருவிகள் உள்ளிட்டவை உற்பத்தி போன்ற பல துறைகளும் சங்கிலி போல் தொடர்புடையவை. இவற்றுடன் சுற்றுலா, வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தினமும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மத்திய அரசும், போராடும் விவசாயச் சங்கங்களும் உடனடியாக இந்தப் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று அசோசேம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.