பலாத்காரத்தில் கர்ப்பிணியாகி குழந்தை பெற்ற 14 வயது சிறுமி அண்ணன் உள்பட 4 பேர் கைது
அண்ணன் உட்பட 4 பேரின் பலாத்காரத்திற்கு இரையான 14 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியை பலாத்காரம் செய்த அண்ணன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் இந்த சம்பவம் நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் உள்ளது படுகலன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஒரு 14 வயது சிறுமியை அதன் பெற்றோர் அஜ்மீரிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர்.
அந்த சிறுமிக்கு சிறிது நேரத்திலேயே குழந்தை பிறந்தது. டாக்டர்கள் அந்த சிறுமியின் பெற்றோரிடம் வயது உட்பட விவரங்கள் குறித்து விசாரித்த போது தான் அந்த சிறுமிக்கு 14 வயது மட்டுமே ஆகிறது என தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக படுகலன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நரோத்தம் சிங் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அந்த சிறுமியிடம் விசாரித்தபோது தான் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அந்த சிறுமியை அவரது அண்ணன் உள்பட அப்பகுதியை சேர்ந்த 4 பேர் சேர்ந்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்தே தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு சிறுமியின் அண்ணன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். சிறுமியின் அண்ணனுக்கு 17 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு பேர் மீதும் போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.