சூர்யா படம் டிராப் ஆனதால் வேறு ஹீரோவுடன் கைகோர்த்த இயக்குனர்..
சூர்யா நடித்த சிங்கம் ஒன்று முதல் 3 படங்களை இயக்கியவர் ஹரி. விக்ரம் நடித்த சாமி படத்தை சூப்பர் ஹிட் படமாக தந்தார். இவர் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாகவும் அதற்கு அருவா எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. சூர்யா இது தவிரக் கவுதம் மேனன், வெற்றி மாறன், பாண்டிராஜ் ஆகியோர் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டார். கொரோனா ஊரடங்கில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தை ஒடிடியில் வெளியிட சூர்யா முடிவு செய்தார். அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இயக்குனர் ஹரியும் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தியேட்டர்கள் தான் நம்மை வளர்த்தது அதை மறக்கக்கூடாது என்றார். இந்நிலையில் சூர்யா - ஹரி இணையவிருந்த அருவா படம் டிராப் ஆனதாகத் தகவல் வெளியானது. இப்பிரச்சினையால் இருவருக்கும் ஏற்பட்ட மனவருத்தம் எப்போது தீரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஹரி மற்றொரு ஹீரோவுடன் கைகோர்த்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல அருண் விஜய் தான். ஹரி, அருண் விஜய் இருவரும் உறவினர்கள் என்றாலும் இதுவரை அருண் விஜய் படத்தை ஹரி இயக்கியதில்லை. முதன் முறையாக இருவரும் புதிய படத்தில் இணைகின்றனர்.
அண்மையில் நவீனின் அக்னிச் சிறகுகள் படப்பிடிப்பை முடித்த அருண் விஜய் ஏ.வி 31 படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஏ.வி 31 படத்திற்கான நீண்ட நாள் படப்பிடிப்புக்கு முன்னதாக அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளார். அருண் விஜய் தனது அடுத்த படம் ஹரியுடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியைத் தனது ரசிகர்களுக்கு வெளிப்படுத்த அவர் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில்,ஆம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏவி31 க்குப் பிறகு எனது அடுத்த படம் ட்ரம்ஸ்டிக் ப்ரடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் ஹரியுடன் இருக்கும். அவருடன் பணியாற்றும் புதிய அனுபவத்தை எதிர் பார்க்கிறேன் என்றார்.அருண் விஜய் தற்போது ஏ.வி 31 படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தை அரிவாசகன் இயக்குகிறார். இதில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடிக்கிறார். அக்னிச் சிறகுகள் படத்தில் அருண் விஜய் நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன், நாசர், ஜே சதீஷ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.சூர்யா-ஹரி கூட்டணி மீது ரசிகர்களுக்குத் தனி ஈர்ப்பு இருந்தது. இதேபோல் இயக்குனர், ஹீரோவுக்கும் சிறப்பான நட்பும் இருந்தது. அந்த நட்பு ஒடிடி பட ரிலீஸ் விஷயத்தில் தற்போது உடைந்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. சிங்கம் 4 படத்தை இருவரும் இணைந்து தருவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில் இந்த மோதல் எதிர்பாராதவிதமாக அமைந்திருக்கிறது என்று கோலிவுட்டில் முணுமுணுப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே சூர்யாவுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே சிறிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டது நாளடைவில் அது சரியாகி மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைவது போல் சூர்யா-ஹரி மனக் கசப்பும் நாளடைவில் மறைந்து மற்றொரு பெரிய படத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் இதெல்லாம் சாதாரணமப்பா என்று நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.