தேனீ, விஷ வண்டுகள் கொட்டி மரணமடைபவர்களின் குடும்பத்தினருக்கு ₹ 2 லட்சம் நிதியுதவி கேரள அரசு நடவடிக்கை

கேரளாவில் தேனீ மற்றும் விஷ வண்டுகள் கொட்டி மரணமடைபவர்களின் குடும்பத்தினருக்கு ₹ 2 லட்சம் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார்.கேரளாவில் வன விலங்குகள் தாக்கி இறப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

காட்டு யானைகள் உட்பட வனவிலங்குகள் தாக்கி இறப்பவர்கள் குடும்பத்தினருக்கு ₹ 10 லட்சமும், பாம்பு கடித்து மரணமடைபவர்களின் குடும்பத்திற்கு ₹ 2 லட்சமும் அரசு வழங்குகிறது. இந்நிலையில் தேனீ மற்றும் விஷ வண்டுகள் கொட்டி இறப்பவர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

கேரளாவில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 5 முதல் 8 பேர் வரை தேனீ மற்றும் விஷ வண்டுகள் தாக்கி இறப்பது தெரிய வந்துள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கேரள சட்டசபைக் குழுவுக்கு இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து கேரள வனத்துறை அமைச்சர் ராஜுவிடம் சட்டசபை குழு தெரிவித்தது.இதையடுத்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கேரள வனத்துறை தலைமை அதிகாரிக்கு வனத்துறை அமைச்சர் ராஜு உத்தரவிட்டார். இந்நிலையில் தேனீ மற்றும் விஷ வண்டுகள் தாக்கி இறப்பவர்களின் குடும்பத்தினருக்கு ₹ 2 லட்சம் நிதி உதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார்.

More News >>