இங்கிலாந்திற்கு மேலும் ஒரு தலைவலி: புதிய மாறுபாட்டுடன் கொரோனா தாக்குவதாக சுகாதாரத்துறைச் செயலர் அறிக்கை.!!!
லண்டன்: இங்கிலாந்தில் புதிய மாறுபாட்டுடன் கொரோனா தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்து 69 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 64,402 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்திற்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கொரோனா தொற்று புதிய மாறுபாட்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த மாறுபட்ட தாக்கம் தென்கிழக்கில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், சுமார் 1000 பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன.
தற்போதுள்ள வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தடுப்பூசிகள் இந்த மாறுபாட்டைக் கட்டுப்படுத்த பயன்படுமா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்புக்கு புதிய கொரோனா தொற்று குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.