அமெரிக்காவில் மகனின் செயலால் அதிர்ச்சியான தாய்: செல்போனில் கேம் விளையாடி ரூ.11 லட்சம் காலி செய்த 6 வயது சிறுவன்.!!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ.11 லட்சம் காலி செய்த 6 வயது சிறுவனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் இருக்கிறார். ஜெஸ்சிகா வீட்டில் இருந்து வேலைசெய்வதும் ஜார்ஜ் ஜான்சன் செல்போனில் கேம் விளையாடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் ஜெஸ்சிகா ஜான்சனின் வங்கி கணக்கில் இருந்து மொத்தமாக 2500 டாலர்கள் 25 முறை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஜெஸ்சிகா வங்கிக்கணக்கில் ஏதேனும் மோசடி நடைபெற்றுள்ளது என்று வங்கியில் புகார் அளித்துள்ளார்.தொடர்ந்து, ஜூலை மாத இறுதியில் வங்கிக் கணக்கில் இருந்து 16,293 டாலர்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கியின் மூலம் தீவிர விசாரணையில் ஜெஸ்சிகா ஈடுபட்டார்.
பின்னர் தான், வங்கிக் கணக்கிலிருந்து பணம் காலியானதற்கு வங்கி மோசடி காரணம் இல்லை. செல்போனில் மகன் விளையாடிய கேம்தான் என்று தெரியவந்தது. தொடர்ந்து, தனது மகன் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான கேம் விளையாடியதால் பணம் எடுக்கப்பட்டதை அறிந்து, ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஜெஸ்சிகா தகவல் கேட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், தங்கள் மகன் ஜார்ஜ் ஜான்சன், ஐபேடில் உள்ள சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடியதும் அதில் வழங்கப்படும் கோல்டு காயின்ஸை பெற வேண்டி நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டதும் தெரியவந்துள்ளது.மகனின் விளையாட்டினால், இந்திய மதிப்பில் 11 லட்சம் வரை ஜெஸ்சிகா பணத்தை இழந்துள்ளார். இருப்பினும், பணத்தைத் திருப்பித் தர முடியாது எனஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.