எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகள் போராட்டம் டெல்லி உயர்நீதிமன்றம் திடீர் தடை
சட்டத்தை மீறி போராட்டம் நடத்துவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகளின் போராட்டத்திற்கு ஜனவரி 18 வரை டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று முதல் காலவரையற்ற திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, கொரோனா சிகிச்சைப் பிரிவு உட்பட ஸ்தம்பித்தன. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை டெல்லி போலீசார் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நர்சுகளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல நர்சுகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் நர்சுகளின் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி நவீன் சாவ்லா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நர்சுகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்றும், தொழில்துறை பிரச்சினை சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தற்போது இதை மீறி போராட்டம் நடைபெறுவதாகவும் எய்ம்ஸ் நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. தங்களது குறைகள் குறித்து பரிசீலிக்கவோ, முடிவு எடுக்கவோ செய்யாமல் அதற்கு பதிலாக போராட்டத்தை ஒடுக்க அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று நர்சுகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த டிவிஷன் பெஞ்ச், இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதுவரை நர்சுகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.