அடுத்த வருட குடியரசு தின சிறப்பு விருந்தினர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள, தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வது உண்டு. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்தியாவின் அழைப்பை பிரிட்டன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இதை ஒரு பெரிய கவுரவமாக கருதுவதாகவும் இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்ய வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: அடுத்த வருடம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். நான் இந்தியா வருவதின் மூலம் இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலப்படும். உலகத்தின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையாக இந்தியா உள்ளது. உலகத்தில் 50 சதவீதம் தடுப்பூசியை தயாரித்து விநியோகம் செய்கின்ற இந்தியாவிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தான் பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரசெனக்கா ஆகியவை இணைந்து கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 1993ம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவில் அப்போதைய பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதன் பின்னர் தற்போது தான் பிரிட்டன் பிரதமர் ஒருவர் இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை, இந்தியா இங்கிலாந்து இடையே ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றார். இதற்கிடையே இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டொமினிக் ராப் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். இதற்கிடையே அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

More News >>