மத்திய அரசை பணிய வைப்போம்.. போராடும் விவசாயிகள் உறுதி..
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 21வது நாளாக இன்று(டிச.16) விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது. அவர்களின் போராட்டம் 21வது நாளாகத் தொடர்கிறது.
சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:விவசாயிகளின் போராட்டத்தை அரசியலாக்கி ஒடுக்குவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு பிடிவாதம் செய்கிறது. ஆனால், நாங்கள் மத்திய அரசைப் பணிய வைப்போம். சட்டங்களை ரத்து செய்ய வைப்போம். அது வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, குஜராத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தூண்டி விட்டுள்ளதாக மீண்டும் குற்றம்சாட்டினார். வேளாண் சட்டங்களில் உள்ள லாபங்களை விவசாயிகள் உணர்ந்து போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இந்நிலையில், விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் மனு உள்ளிட்டவற்றை சுப்ரீம் கோர்ட் இன்று(டிச.16) விசாரிக்க உள்ளது.