ஆட்சியை கலைத்து பாருங்க. பாஜகவுக்கு மம்தா சவால்..

எனது ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள் என்று மத்திய பாஜக அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. இதற்கிடையே, இரு கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கொல்கத்தாவுக்குச் சென்ற போது அவர் கார் மீது கல்வீச்சு நடைபெற்றது. இதையடுத்து, அம்மாநில காவல் துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், ஜல்பைகுரியில் நடந்த பேரணியில் திரிணாமுல் தலைவரும்,முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:என்னை அச்சுறுத்துவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். எனது ஆட்சியைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்திப் பாருங்கள். அப்படிச் செய்தால் அது நல்ல விஷயம்தான். எனக்கு வேலைப்பளு குறைந்து விடும். நிறையப் பேரணிகளை நடத்தித் தேர்தல் வேலைகளைச் செய்வேன். டார்ஜிலிங் பிரச்சனைக்கு எங்கள் ஆட்சியால்தான் நிரந்தரத் தீர்வு காண முடியும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

More News >>