கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி முன்னிலை
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்திலும், பாஜக கூட்டணி 3வது இடத்திலும் உள்ளது. கேரளாவில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகளும், 86 நகர சபைகளும், 14 மாவட்ட பஞ்சாயத்துகளும், 152 ஊராட்சி ஒன்றியங்களும், 941 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னனியில் இருந்தது. ஆனால் பின்னர் பெரும்பாலான வார்டுகளில் இடது முன்னணி முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் இடது முன்னணி 4 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. 86 நகர சபைகளில் இடது முன்னணி 35 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 3 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 10 இடங்களில் இடது முன்னணியும், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னணியில் உள்ளது. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 100 இடங்களில் இடது முன்னணியும், 51 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், 1 இடத்தில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளது.
941 கிராம பஞ்சாயத்துகளில் 445 இடங்களில் இடது முன்னணியும், 349 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், 31 இடங்களில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டுமே பாஜக 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கக் கடத்தல் வழக்கு, கேரள மாநில சிபிஎம் முன்னாள் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது உள்பட பல புகார்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக சுமத்தப்பட்ட போதிலும் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.