ஆத்தா,சின்னாத்தா, பெரியதாயி... போயஸ் தோட்டத்தில் விவேக் வளர்ந்த கதை!

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சியின் நிலை இதற்கு முன் கண்டிராத பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி இன்னும் தீர்ந்தபாடில்லை. கட்சியின் சின்னமும், கொடியும் யாருக்கு உரிமையானது என்பதில் விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்று கடைசியில் அதிகாரப்போட்டியால் முதலில் பிரிந்திருந்த, பின்னர் ஒன்று சேர்ந்து விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வசம் வந்து விட்டது.

கட்சியின் இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் தக்க வைத்துக் கொண்டதில் பல்வேறு திரைமறைவு ஆட்டங்கள் நடந்தது சாமானிய தொண்டர்களுக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தான் அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய மன்னார்குடி வகையறாக்களில் வித்தியாசமானவராக, சமீப காலம் வரையில் வெளியில் பெயர் அதிகமாக அடிப்பட்டிருக்காத விவேக் ஜெயராமன் பக்கம் அரசியல் நோக்கர்களின் பார்வை திரும்பியுள்ளது.

இதற்கு காரணம் ஜெயா டிவியில் கடந்த 6ம் தேதி நடந்த மிகப்பெரிய மாற்றம். தினந்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றிய செய்தி ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. ஜெயா டிவியின் 16 ஆண்டு கால வரலாற்றில், அதன் நிறுவனர் ஜெயலலிதாவின் பரம அரசியல் வைரியான திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் முகங்கள் ஒளிபரப்பானது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நவம்பர் 8ம் தேதி திமுக மாநிலம் தழுவிய அளவில் நடத்திய ‘கறுப்பு தினம்’ போராட்டமும் ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. போதாக்குறைக்கு ஸ்டாலின் அறிக்கைகளும் செய்தியாக வெளியிடப்பட்டன. அதிமுக அபிமானிகளும், கட்சி தொண்டர்களும் குழம்பிப் போனார்கள், அவ்வளவு ஏன், ஜெயா டிவி செய்திக் குழுவினருக்கும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ‘‘மேலிட’’ உத்தரவுப்படி தாங்கள் செயல்படுவதாக மட்டுமே அவர்கள் கூறினார். இந்த உத்தரவுக்கு காரணமாக பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் 29 வயதாகும் விவேக் ஜெயராமன். சசிகலாவின் சகோதரர் ஜெயராமன் மற்றும் சசிகலாவுடன் தற்போது பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இளவரசியின் மகன் தான் இந்த விவேக். 1990ம் ஆண்டு அவர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த போது அவரது தந்தை ஜெயராமன் ஹைதராபாத்தில் ஜெயலலிதாவின் திராட்சை தோட்டத்தில் பணியாற்றிய போது மின்சாரம் பாய்ந்து பலியானார். அப்போது தனது மூத்த மகள்கள் சகீலா மற்றும் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக் உடன் இளவரசி மன்னார்குடியில் தான் வசித்து வந்தார். மகள்கள் இருவரும் பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே படித்தத்தால் அவர்களை மன்னார்குடியில் உறவினர்களின் பாதுகாப்பில் விட்டு விட்டு, விவேக்கை தூக்கிக் கொண்டு சென்னைக்கு இடம்மாறினார் இளவரசி.

தமிழகத்தின் முக்கியமான அரசியல் மையமாக திகழ்ந்த போயஸ் கார்டனில் ஜெயலலிதா மற்றும் சகிகலா உடன் ஐக்கியமானார் இளவரசி. ஜெயலலிதா விவேக்கை ‘பாய்’ என்றே செல்லமாக அழைத்து வந்தார். சசிகலா அத்தை என்றாலும் அவரை சின்னத்தா என்றும் ஜெயலலிதாவை பெரியாத்தா என்றே அழைத்து வளர்ந்து வந்துள்ளார் விவேக். பலத்த போலீஸ் பாதுகாப்பு, ஏராளமான வேலையாட்கள் என சின்ன வயது முதலே ராஜபோகமாக வளர்ந்து வந்த விவேக்கிடம் சசிகலா கண்டிப்புடனும், அதே சமயம் ஜெயலலிதா பாசத்துடனும் நடந்துக் கொண்டனர். போயஸ் தோட்டத்து வீட்டு மொட்டை மாடியில், 9 வயதான பள்ளிக்கூட சிறுவனாக இருந்த போது 4 போலீஸார் பாதுகாப்புடன் பட்டம் பறக்க விடும் அளவுக்கு விவேக் ஒரு இளவரசன் போல் வளைய வந்தார். பின்னர் 10வது வயதில் கோயமுத்தூரில் ஒரு பிரபல பள்ளியில் ஹாஸ்டலில் அவரை சேர்த்து விட்டார் சசிகலா. பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு பிபிஏ படிப்புக்காக ஆஸ்திரேலியே சென்றார் விவேக்.

செலவுக்கு கொடுத்து விட்ட டாலர்கள் கரைந்து விட, மேற்கொண்டு சசிகலாவிடம் இருந்து பணம் வராததால் திண்டாடிப்போன விவேக் கைச்செலவுக்காக படிக்கும் போதே பகுதி நேர வேலை செய்யத் தொடங்கினார். ஒரு பிரபல பெருநிறுவனத்தில் சரக்குகளை கையாளும் வேலையை ஆரம்பத்தில் செய்த அவர் பின்னர், பிட்ஸா ஹட்டில் பணிக்கு சேர்ந்து வகுப்பு நேரங்கள் தவிர்த்து இதர நேரத்தில் வீடு வீடாக பிட்ஸா கொண்டு போய்க் கொடுக்கும் டெலிவரி பாய் வேலையும் செய்தார்.

பிபிஏ முடித்து, புனே சிம்பியாசிஸ் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ படித்த அவருக்கு சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர், ஐடிசி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். வீடு, அலுவலகம் என்று வெளியே தெரியவராத சாதாரண மனிதராக இருந்தார். எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது 2014ம் ஆண்டு. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டப் போது அவர்களை நேரில் பார்ப்பதற்காக அனுமதி கேட்டார். அப்போது தான் விவேக் உண்மையில் யார் என்பதே தெரிய வந்தது. இதன் பிறகு விவேக்கை அவரது உயரதிகாரி முதற்கொண்டு அனைவரும் அவரை பயத்துடனும், மரியாதையுடனும் நடத்தத் தொடங்கினர். 2015ல் வேலையை உதறிய விவேக், சசிகலா உத்தரவுப்படி ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை கவனிக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி ஆனார். அவரின் கட்டுப்பாட்டில்தான் தற்போது ஜெயா டி.வி செயல்படுகிறது. துரைமுருகன் பேட்டி ஒளிபரப்பானது கூட விவேக்கின் உத்தரவுப்படிதான். நேரடியான அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும், அடுத்த கட்டத்துக்கு செல்லும் முனைப்பில் அவர் இருப்பதாக தெரிகிறது. சமீபத்திய வருமான வரித்துறையின் சோதனைகள் பற்றி பெரிதாக எதுவும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை விவேக். இது பற்றி கேட்டால், ‘‘அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்தனர். ஜெயா டிவியிலோ, ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திலோ முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. கைப்பற்றிய எனது மனைவியின் நகைகளை முறையான ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சோதனை நடத்தப்பட்டதா என்பது வழக்கின் போக்கை பொறுத்தே சொல்ல முடியும்’’ என்று மர்மமாக புன்னகைக்கிறார்.

More News >>