ஆஸ்ரம் பள்ளி வாடகை பிரச்சனை.. லதா ரஜினிகாந்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.ரஜினி கட்சி ஆரம்பிக்கும் தேதி குறித்து டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் பெயரில் மக்கள் சேவைக் கட்சி என்றொரு கட்சி பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை மறுக்காத ரஜினி தரப்பு, டிச.31 வரை காத்திருக்குமாறு தொண்டர்களுக்கு கூறியுள்ளது.
இதற்கிடையே, சிஸ்டம் சரியில்லை, எல்லாத்தையும் மாத்துவோம் என்று சொல்லி கட்சி ஆரம்பிக்கும் ரஜினியை சமூக ஊடகங்களில் கடுமையாக வறுத்தெடுத்து வருகிறார்கள். காரணம், அவரது குடும்பத்தினரின் பிரச்சனைகள் தான்.ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி கட்டிடத்திற்கு அவர் கோடிக் கணக்கில் வாடகைப் பாக்கி வைத்து, ஐகோர்ட் வரை வழக்கு சென்றதுதான். அது மட்டுமல்ல. லதா ரஜினிகாந்த் நடத்தும் டிராவல்ஸ் நிறுவனம் உள்ள மாநகராட்சி கட்டிடத்திற்கு வாடகை தருவதிலும் பிரச்சனை ஏற்பட்டு அதுவும் ஐகோர்ட்டுக்கு சென்றது.
அதே போல், ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திர கல்யாண மண்டபத்திற்குச் சேவை வரி கட்ட முடியாது என்றும் ரஜினி தரப்பில் கோர்ட்டுக்கு சென்றனர். அதற்கு கொரோனா காலத்தில் மண்படம் பூட்டியிருந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. கொரோனா காலத்தில் ஏழைகள் எல்லாம் உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் போது பெருங்கோடீஸ்வரரான ரஜினி சேவை வரி கட்ட மறுப்பதா? இவர் எப்படி சிஸ்டத்தை திருத்துவார்? என்று நெட்டிசன்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.இந்நிலையில், லதா ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஆஸ்ரமம் பள்ளி கட்டிடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியிருக்கிறது. தி இந்து நாளிதழில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே ஒரு வாடகை கட்டிடத்தில் ஆஸ்ரம் பள்ளியை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். பள்ளியை நடத்தும் ராகவேந்திர கல்வி அறக்கட்டளையின் செயலாளராக லதா இருக்கிறார். பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தின் உரிமையாளர் வெங்கடேஷ்வரலு, பூர்ணச் சந்திரராவ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளிக்கான வாடகை தொகையைச் சரிவர தராமல் ரூ.11 கோடி வரை நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, லதா ரஜினிகாந்த் கட்டிட உரிமையாளருக்கு உடனடியாக ரூ. 2 கோடி கொடுக்கும்படியும், மாதம் ரூ. 10 லட்சம் தரும்படியும் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், லதா ரஜினிகாந்த் பணத்தை முழுமையா தரவில்லை.
இதைத் தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டில் வெங்கடேஸ்வரலு, பூர்ணசந்திரராவ் ஆகியோர் ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். அதில், கடந்த 2013 மார்ச் வரை ஒரு கோடியே 99 லட்சம் ரூபாய் வாடகைப் பாக்கியை லதா தர வேண்டுமென்றும் அதைத் தருவதுடன் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவிட வேண்டுமென்றும் கோரப்பட்டது.இதன்படி, வாடகைப் பாக்கியைச் செலுத்துவதுடன் 2020 ஏப்ரலுடன் கட்டிடத்தை காலி செய்ய வேண்டுமென்று லதாவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், கொரோனா காலமாகி விட்டதால் பள்ளியை காலி செய்ய முடியவில்லை என்றும் 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை அவகாசம் வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், வரும் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதே சமயம், பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், 2021 ஏப்ரல் மாதத்திற்கு பிறகும் காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.