பாப்புலர் பிரண்ட் வங்கிக் கணக்கில் ₹ 100 கோடி முதலீடு... மத்திய அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்கில் கடந்த ஒரு சில வருடங்களில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.டெல்லி மற்றும் பெங்களூருவில் சமீபத்தில் நடந்த பயங்கர கலவரத்தில் பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் பணம் முதலீடு செய்யப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் மத்திய அமலாக்கத் துறை பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கிடையே உத்திரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்த இளம் பெண்ணின் பெற்றோரை சந்திக்க முயன்ற பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் தேசிய பொருளாளர் அதீக்வர் ரகுமான் மற்றும் கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் உட்பட 4 பேரை உ பி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரளாவைச் சார்ந்த கேம்பஸ் பிரண்ட் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ரவூப் செரீப் என்பவர் இவர்களுக்கு பண உதவி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ரவூப்பின் நடவடிக்கைகளை மத்திய அமலாக்கத் துறை ரகசியமாக கண்காணித்து வந்தது.ரவூப்பின் வங்கிக் கணக்குகளை பரிசோதித்த போது கடந்த ஒரு சில வருடங்களில் அவரது 3 வங்கிக் கணக்குகளில் ₹ 2 கோடிக்கு மேல் பணம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி 3 முறை மத்திய அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை மத்திய அமலாக்கத் துறை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ரவூப்பை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி மத்திய அமலாக்கத் துறை சார்பில் ஒரு மனு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஒரு சில வருடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ₹ 100 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இது குறித்து கூடுதல் விசாரணைக்காக ரவூப்பை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

More News >>