நெல்லை தினமலர் நிர்வாகி தினேஷ் கமல் கட்சியில் சேர்ந்தார்..
திருநெல்வேலி பதிப்பு தினமலர் செயல் இயக்குனர் தினேஷ், மக்கள் நீதிமய்யம் கட்சியில் சேர்ந்தார்.தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ் தினமலர். இந்த பத்திரிகையை மறைந்த டி.வி.ராமசுப்பையர் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி பதிப்பை டி.வி.ராமசுப்பையரின் கொள்ளுப் பேரனும் ஆர்.வெங்கடபதியின் பேரனுமாகிய தினேஷ் நடத்தி வருகிறார். நெல்லை பதிப்பின் செயல் இயக்குனராக உள்ள இவர் இன்று(டிச.16) மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் தினேஷ் அக்கட்சியில் சேர்ந்தார். அவருக்கு உறுப்பினர் கார்டு அளித்து கமல் வரவேற்றார். ஏற்கனவே திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, பாஜகவில் சேர்ந்து அக்கட்சியில் தேசியப் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார். அவரது சகோதரர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளராக உள்ளார்.
சமீபகாலமாக, தினமலர் சென்னை பதிப்பில் தினமும் திராவிட இயக்கங்களைப் பழித்தும், பாஜக மற்றும் ரஜினியின் தவறுகளை எல்லாம் மறைத்துத் தூக்கிப் பிடித்தும் கட்டுரைகளை எழுதி வருகிறது. எனவே, பாஜக, விசுவ இந்து பரிஷத், ரஜினி கட்சி, மக்கள் நீதிமய்யம், ஆர்.ஆர்.கோபால்ஜி, ஆர்.பாலாஜி, தினேஷ் ஆகிய எல்லா பெயர்களுமே ஒரே அரசியல் புள்ளியில் சேருவதை உணரலாம். அதனால்தான் கமல், ரஜினி கட்சிகளை பாஜகவின் பி டீம்களாக திராவிட இயக்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.