கேரள உள்ளாட்சி தேர்தலில் இடது முன்னணி அமோக வெற்றி காங்கிரஸ், பாஜக படுதோல்வி
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆளும் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்திற்கும் தொடர்பு இருப்பதாகப் பரபரப்பு புகார் கூறப்பட்டது.
முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டது இடது முன்னணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக முன்னாள் சிபிஎம் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் கைது செய்யப்பட்டது ஆளுங்கட்சிக்கு அடுத்த அடியைக் கொடுத்தது. இதன் பின்னர் அடுக்கடுக்காக மேலும் பல்வேறு புகார்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகக் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் இடதுசாரி கட்சிகள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இந்த நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தலும் வந்தது. காங்கிரசும் பாஜகவும் மாறிமாறி இடது முன்னணி அரசைக் குற்றம் சாட்டி வந்ததால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கூட்டணி படுதோல்வி அடையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.மேலும் இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருதப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நகரசபைகளில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி இடது முன்னணியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் இடது முன்னணி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 86 நகரசபைகளில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும், இடது முன்னணி 35 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளில் 10 இடங்களில் இடது முன்னணியும், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் 108 இடங்களில் இடது முன்னணியும், 40 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 941 கிராம பஞ்சாயத்துகளில் இடது முன்னணி 517 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 374 இடங்களிலும், பாஜக கூட்டணி 28 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி பாலக்காடு மற்றும் பந்தளம் ஆகிய 2 நகரசபைகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை இம்முறை எப்படியும் கைப்பற்றுவோம் என்று பாஜக கூறிவந்தது. ஆனால் கடந்த முறை வெற்றி பெற்ற அதே எண்ணிக்கையில் தான் இம்முறையும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மூலம் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அந்த தேர்தலுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள இந்த வெற்றி இடதுசாரி கூட்டணிக்கு ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.